போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற SC, ST மாணவர்களுக்கு உதவித் தொகை – தமிழக அரசு திட்டம்
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற வசதியாக உதவித் தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தாட்கோ நிறுவனத்தின் மூலமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கிராமப் பகுதிகளில் பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.
நகர்ப்புறங்களில் தங்கி தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற மூன்று மாதங்களுக்கு சுமார் ரூ.1 லட்சம் வரை செலவாகிறது.
எனவே, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 ஆகிய தேர்வுகளில் முதன்மைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணமாக ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க அரசு ஆலோசித்து வருகிறது.
இதேபோன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இதர தேர்வுகளில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித் தொகை அளிக்கவும் அரசு யோசித்து வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு மூன்று முறை மட்டுமே மானியம் அளிக்கப்படும்.
அரசுப் பணியில் பணியாற்றி போட்டித் தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை செலவாகும்.
இந்தத் திட்டம் குறித்த அறிவிப்புகள் சட்டப் பேர வையில் மானியக் கோரிக்கையின் போது வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.